திருஞானசம்பந்தர் குருபூஜை
2024

25-05-2024 — சனிக்கிழமை

வைகாசி மூல நட்சத்திரத் திருநாள்

துறவறமே முக்திக்கு வழி’ என்று பிற மதங்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, `இறைவனை அடைவதற்கு இல்லறம் ஒரு தடையல்ல’ என்றது சைவம்.
இல்லறத்தில் இருக்கும் பக்தர்களும் இறைவனிடம் பக்திகொண்டு அதன் மூலம் முக்தியை அடையலாம் என்பதை நாயன்மார்கள் தம் வாழ்வியல் மூலம் விளக்கினர். நாயன்மார்களுள் முதல்வர், சிவநெறி தழைக்கத் தன் வாழ்க்கை முழுமையையும் அர்ப்பணித்தவர் திருஞானசம்பந்தர்.

மூன்று வயது பாலகனாக ஞானம் பெற்ற சம்பந்தர் பிரான், தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தரிசிப்பதையும் அவற்றைப் பாடுவதையுமே தம் பணியாகக் கொண்டார். அவருக்கு வயது பதினாறானது. வளரிளம் பருவம் எய்தி அழகில் அந்த முருகக் கடவுளையே நிகர்த்திருந்தார். ஊரெல்லாம் சுற்றி அவர் பிறந்த ஊரான சீர்காழி வந்து சேர்ந்தபோது, அவரைக் கண்ட தந்தை சிவபாதர், அவருக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார். சிந்தையில் சிவனை வைத்த சம்பந்தரோ அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால், உறவினர் அனைவரும் வற்புறுத்தவே, `அதுவே சிவ சித்தம்’ என்று உணர்ந்து திருமணத்திற்கு சம்மதித்தார்.

ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர்பெருமணம் என்னும் தலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரின் மகள் தோத்திர பூர்ணாம்பிகை. சிறுவயதுமுதலே சிவ நாமத்தை ஜபித்தும், நாயன்மார்கள் பாடிய தேவாரப் பாடல்களைப் பாடியும் வந்த நங்கை. அவளை, திருஞான சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர்.

அன்று வைகாசி மாத மூல நட்சத்திர நாள். திருநல்லூர்பெருமணத் தலத்து சிவாலயத்தில் பக்தர்கள் பெரும்கூட்டமாய்த் திரண்டிருந்தனர். அனைவரும் ஞானசம்பந்தப் பெருமானை தரிசிக்கவென்றே வந்தவர்கள். வளரிளம் பருவத்து கம்பீரமும் குழந்தமை கொஞ்சும் அமைதியும் ஒரு சேரத் திகழ்ந்தது அவரது திருமுகம்.

நாடெங்கும் நடந்து நடந்து, பல திருத்தலங்களிலும் பதிகங்கள் பாடி, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய பிள்ளை, தங்கள் ஊருக்கு வந்தது குறித்து திருநல்லூர் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திருஞானசம்பந்தர் மட்டுமா, கூடவே, நாயன்மார்களான, திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மூவரும் சம்பந்தரோடு கூடி வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

ஊரும் உறவும் போற்ற, கூடியிருந்த அடியார்கள் எல்லாம் நமசிவாய' என்று ஐந்தெழுத்து மந்திரத்தை முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், ஞானசம்பந்தப் பெருமான் அங்கிருந்தோர் மத்தியில் பேசினார். அவர் பேச்சின் பொருள்,சிவபெருமானை அடைவதுவே உண்மையான திருமண வைபவம். அதை அனைவரும் பெற வேண்டும்’ என்பதாகவே இருந்தது. பேசி முடித்ததும் பதிகம் பாட ஆரம்பித்தார்.

பல பதிகளிலும் சென்று பதிகங்கள் பாடிய சம்பந்தரின் கடைசிப் பதிகம் அது' என்பதை அங்கிருந்தவர்களில் அநேகர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்த நாயன்மார்கள் அறிந்திருந்தனர்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி…’ என்று அவர் பாடப் பாடக் கேட்டோர் அனைவர் மனமும் இறைவன்மேல் காதலுற்று உருகலாயிற்று. `வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்று அவர் பாட, அதைக் கேட்டு அம்மை இறங்கி வந்தாள். பால் கொடுத்துத் தான் தொடங்கிவைத்த ஞானப் பயணத்தின் பந்தத்தை திருநீறு கொடுத்து முடித்து வைக்க தரிசனம் கொடுத்தாள். அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டவர்கள் அனைவரும் அவளை நெருங்க, அனைவருக்கும் அன்னை திருநீறு அளித்து பிறவி வினையறுத்தாள். பந்த பாசத்தில் கட்டுண்டு கிடந்தவர்கள், அவளைக் கண்டு அஞ்சி, அங்கிருந்து விலகி ஓடினர்.

திருநீறினை இட்டுக்கொண்டதும், அங்கு இறைவன் ஜோதி ரூபமாய் பிரசன்னமானார். ஞானசம்பந்தர் தன்னோடு நின்ற அத்தனை அடியார்களையும் கைகூப்பி, சிவஜோதியில் கலக்க அழைத்தார். ஆண்டவரின் ஆனந்தத் திருக்கோலத்தைக் கண்ட அனைவரும், அவரோடு ஜோதியில் கலக்கத் தயாராயினர். திருஞானசம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் பற்றிக்கொண்டு ‘நமசிவாய வாழ்க’ என்று குரலெடுத்துத் துதித்தார். அடியார் அனைவரும் மறுகுரலில் ஐந்தெழுத்தை ஒலிக்க கயிலாயமே அதில் அதிர்ந்தது. முதலில் நாயன்மார் நால்வரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின் அவரடியார் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்றனர்.

You need to add a widget, row, or prebuilt layout before you’ll see anything here. 🙂

திர்