வைகாசி விசாகம் / Vaikasi Visakam

புதன்கிழமை 22-05-2024 / Wednesday May 22, 2024

 

எம்பெருமான் தமிழ்க்கடவுள், குன்றுதோறும் ஆடிவரும் குமரன் ஆறு
முகங்களோடு அவதாரம் செய்த நன்நாளான வைகாசி விசாகத் திருநாள்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். 
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் 
இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.

அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் 
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”

- கந்தபுராணம்