மாணிக்கவாசகர் குருபூசை

09 – 07 – – 2024 – செவ்வாய்க்கிழமை

கேட்டார் உள்ளம் உருக்கும் திருவாசகம்!

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பார்கள். படிப்போர் உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச்செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவாதவூரில் பிறந்தார். அவர் பிறந்த ஊரின் பெயராலேயே ‘திருவாதவூரார்’ என்றே அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய திருவாதவூராரின் புகழைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிக் கௌரவித்தான்.

சிவபெருமானின் புகழ் பாடுவதையே வேலையாகக் கொண்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கே தங்கி இறைவனை எண்ணிப் பாடல்கள் பாடத் தொடங்கினார். தில்லையம்பதியானின் கருணையை மாணிக்கவாசகர் கண்ணீர் சிந்திப் பாட, வேதியர் ஒருவர் ஓலையில் எழுதினார். பாடல்கள் அனைத்தையும் எழுதி முடித்த நிலையில், அந்த வேதியர், ‘திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார்.

‘தெய்வம் மனிதனுக்குக் கூறியது கீதை, மனிதன் மனிதனுக்குக் கூறியது திருக்குறள், மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்’ எனும் பழந்தமிழ் வாக்கியமே மாணிக்கவாசகர் மற்றும் அவர் இயற்றிய திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். இறைவனுக்கு அடிமையாக இருந்து தொண்டாற்றினால், இறைவனே நேரில் வந்து அருள்வான் என்பதை உலக மக்களுக்கு உணர்த்துவது மாணிக்கவாசகரின் வரலாறு.

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் 8 – ம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுக்காலமே வாழ்ந்த மாணிக்கவாசகர், மக்கள் அனைவரும் காணும் வகையில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிதம்பர தலத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவ தலங்களிலும் மாணிக்க வாசகரின் குருபூஜை சிறப்பாக நடைபெறும்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் ஒருமுறை தனது நண்பருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது, கடிதத்தில் திருவாசகத்தைப் பற்றி எழுத நேர்ந்தது. உடனே ஜி.யூ.போப்பின் உள்ளம் உருகத்தொடங்கியது. அவரது விழிகளிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர்த் துளிகள் காகிதத்தில் விழுந்து எழுத்துகளை நனைத்து அழித்தன. திருவாசகத்தால் பெருக்கெடுத்த கண்ணீர்த் துளிகள் விழுந்ததால் அழிந்த எழுத்துகள் மீது மீண்டும் எழுத மனமில்லாமல் அப்படியே, கண்ணீர் தடத்துடனே அந்தக் கடிதத்தை அனுப்பிவைத்தார் ஜி.யு.போப். இப்படியாக ஒரு செய்தி உலவுகிறது.